Saturday, May 18, 2019

என்னுடைய அழைப்பு என்ன? | The Movement Week 1 - Tamil


அழைப்பு 


இன்னைக்கு அழைப்பு - ன்ற வார்த்தை யை பற்றி கொஞ்சம் டீடைல் - லா பார்க்கப் போறோம்.

எப்படி   உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்குதோ, அதே மாதிரி ஒவ்வொருத்தருக்கும் அழைப்பு இருக்கு. அது கடவுளுடைய அழைப்பு.

ஒருத்தர் உங்களுக்கு போன் பண்ணுனா, அதை அட்டென்ட் பண்ணி பேசுறதும், இல்லை மிஸ்டு கால் ஆக்குறதும் உங்க விருப்பம் தான்.

அதேபோல கடவுளும், மகனே/மகளே இங்க வா அப்படினு உங்களை அழைக்கும்போது, அவர் பேச்சை கேட்கிறதும் கேட்காம போறதும் உங்க விருப்பம் தான்.

நீங்க கேட்கலாம், அழைப்பு அழைப்பு அப்படின்றயே, அப்படினா என்ன??

நான் சொல்றேன் . அழைப்பு அப்படினா : கடவுள் உங்களை பூமியில் வைத்திருப்பதற்கான காரணம் அல்லது நோக்கம் .

ஆமாங்க, இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் கடவுள் ஒரு நோக்கம் வச்சிருக்கார்.

இதுல அழகான விஷயம் என்ன தெரியுமா? உங்களுக்கு கடவுள் யாருனு தெரியாம இருந்தாலும் சரி அல்லது நீங்க கடவுளை விட்டு வழிவிலகி  பல பாவங்களுக்கு அடிமையாகி இருந்தாலும் சரி, கடவுள் உங்களுக்குனு ஒரு நோக்கம் வச்சிருக்கார். அதை நீங்க தெரிஞ்சிக்கணும்-ன்றதுக்காகத்தான் உங்களை கடவுள் அழைக்கிறார்.

இதை வாசிச்சிட்டு இருக்கிற உங்ககிட்ட கடவுள் சொல்றாரு, உங்களுக்குனு ஒரு நோக்கம் இந்த உலகத்துல வச்சிருக்கேன் அப்படினு.

எபேசியர் 4:1
ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,

இதுல என்ன சொல்றாங்கன்னா, கடவுள் உங்களுக்குன்னு வச்சிருக்கிற நோக்கத்தை வீணாக்காம, அதை எப்படியாவது அடையிரத்துக்கு முயற்சி பண்ணுங்க.

அழைப்பு/நோக்கம் அப்படிங்கிறது கடவுள் உங்களுக்கு கொடுத்த ஒரு விஷயம் மட்டுமில்ல, நீங்க அதை நிறைவேற்றுவதற்கு நீங்க முயற்சி எடுக்க வேண்டிய விஷயம் கூட...

அழைப்புக்கும் மூவ்மெண்ட்/அசைவு/இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

உங்க அழைப்பு/நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியை  இந்த மூவ்மெண்ட்தான் ஆரம்பிச்சி வைக்க போகுது.

மூவ் பண்றவங்க அதாவது நகர்ந்து செல்றவங்க இல்லனா மூவ்மெண்ட் சாத்தியமே இல்ல.

நம்முடைய அழைப்பு/நோக்கம் நம்முடைய சொந்த மூவ்மெண்ட்/அசைவு/முயற்சியோட சம்பந்தப்பட்டுருக்கு  அப்படிங்கிறத நாம பர்ஸ்ட் உணரணும்.

ஆமா, எல்லாரும் அவங்க வீட்டுல உங்காந்துகிட்டு, நான் எங்கேயும் மூவ் பண்ணி  போக மாட்டேனு  இருந்தாங்க அப்படினா, மிகப்பெரிய மூவ்மெண்ட்/அசைவு அப்படிங்கிறது ஒரு நோட்டுல எழுதுன ஐடியா வா மட்டும் தான் இருக்கும், நடைமுறையில சாத்தியமே ஆகாது

நீங்க கேட்கலாம் மூவ் பண்றவங்க அல்லது நகர்ந்து செல்றவங்க- அப்படினா யாரு? ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போறவங்களா? -னு

இதுக்கு என் வாழ்க்கையில நடந்த, நடந்துக்கிட்டுருக்கிறத  உதாரணமா வச்சி உங்களுக்கு நான் பதில் சொல்றேன் .

2012 - என் வாழ்க்கையில ரொம்ப மோசமான நிலமையில இருந்தேன். முழுமனசோட உள்ள வரணும் அல்லது மொத்தமா வெளிய போகணும்.

அந்த நாள், என்னுடைய பர்ஸ்ட் மூவ் எடுத்து வச்சேன். ஆமா நான் முழுமனசோட உள்ள வர்றதா முடிவு பண்ணுனேன்.

நீங்க கூட உங்க வாழ்க்கையில பர்ஸ்ட் மூவ் எடுக்க வேண்டிய நேரம் இதுவா இருக்கலாம்.

சிலருக்கு இயேசு-வை நான் நம்புறேன் அப்படினு முடிவு எடுக்கிறது பர்ஸ்ட் மூவ்-ஆ இருக்கலாம். இயேசுவை நான் முழுமையா நம்புறேன், அவரை என் வாழ்க்கையில கடவுளா ஏற்றுக் கொள்றேன் அப்படினு பர்ஸ்ட் மூவ் எடுக்கும்போது கண்டிப்பா உங்க வாழ்க்கை மாறும்.

நான் எடுத்த அடுத்த முடிவு சர்ச் அகாடமி - ல சேர்ந்தது. நான் எப்படிப்பட்டவன், கடவுள் எப்படிப்பட்டவர் அப்டிங்கிறத அகாடமி எனக்கு கற்றுக் கொடுத்துச்சு. அகாடமி என் வாழ்க்கையை மொத்தமா மாத்திடுச்சு.

சிலருக்கு சர்ச் அகாடமி ல சேர்வது உங்களுடைய அடுத்த மூவ்-ஆ இருக்கலாம்.

கடவுள் என்னை கம்போடியா, சியம் ரீப்  போன்ற இடங்களுக்கு அழைச்சிட்டு போனார்.

2015 - நானும் என் மனைவி ஷோபியும் சென்னைக்கு மூவ் பண்ணி போனோம்.

கடந்த 6 வருசமா நாங்க மூவ் பண்ணிட்டே இருக்கோம். எங்களுக்கு சரியான வேலை கிடையாது, நிரந்தரமான பணம் கிடையாது, ஆனால் கடவுள் நாங்க எதிர்ப்பார்க்காத அளவிற்கு எங்களுக்கு தேவையானவற்றைக் கொடுத்து எங்களை பாதுகாக்கிறார்.

ஒருவேளை என் வாழ்க்கைபோல உங்க வாழ்க்கை இருக்காது. ஆனா உங்க வாழ்க்கையில உங்களுடைய அடுத்த மூவ் என்ன?

ஒருவேளை புது வியாபாரம் ஆரம்பிக்கிறதா இருக்கலாம், உங்க கனவை அடைவதற்கான முயற்சி எடுக்கிறதா இருக்கலாம்,  உங்க வேலைய விட்டு விலகுறதா இருக்கலாம், கடவுளை, ராஜ்யத்தை தேடுவதா இருக்கலாம், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மூவ் பண்றதாகூட இருக்கலாம்.

ஆனால் எல்லாமே உங்களுடைய விருப்பத்தை பொறுத்துதான்.

நம்முடைய ஒவ்வொரு மூவ்மெண்டும் நம்மை சுற்றி ஒரு பாதிப்பையோ/மாற்றத்தையோ ஏற்படுத்தும்.

நம்முடைய உடம்பில் ஓடுற இரத்தம் மூவ்மென்ட்லயே இருக்கிறதுனாலதான் நாம் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

நம்ம நாட்டுல ஒருத்தர் 40 வருசமா கையை மேலே தூக்கி சாமியை வேண்டிட்டு இருக்கார். இப்ப அவரால கையை அசைக்க கூட முடியாது. ஏன்-னா கையில மூவ்மெண்ட்டே இல்லாததால கை மரத்துப்போச்ச்சு.

இதேபோல ஆன்மிக வாழ்க்கையிலும் கடவுள் நம்ம வாழ்க்கையில மூவ் பண்ண விரும்பும்போது நாம அனுமதிக்கலைனா நம்ம வாழ்க்கையும்  கை மாறி மரத்துப்போகும்.

ஆனால் நம்மில் சிலர் 4 வருசமாவோ அல்லது 40 மாசமாவோ அல்லது 40 வருசமாவோ மூவ் பண்ணாமலே இருக்கோம்.

யோசிச்சு பாருங்க, உலகத்துல இருக்கிற எல்லாரும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி ஒன்றாக  மூவ் பண்ண ஆரம்பிச்சோம்னா எப்படிப்பட்ட வளர்ச்சி அல்லது முன்னேற்றம் இருக்கும் அப்படினு.

இப்ப நமக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வரும். நான் எங்க மூவ் பண்றது? கடவுள் என்னை எங்கே அழைக்கிறார்?

நாம் அதிகமா யோசிச்சு இந்த கேள்வியை ரொம்ப சிக்கலான கேள்வியா மாத்திடுறோம்

இயேசு ஒரே வார்த்தையில சொல்லுகிறார்  "போ".

"போ" - இதை மிகப்பெரிய கட்டளையாவே கொடுத்திருக்கிறார்

அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

என்ன ? எருசலேம், யூதேயா, சமாரியா வுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்கனு இயேசு சொல்றாரு??

இயேசு இதை இலக்கியமாக சொல்லவில்லை, அடையாளபூர்வமாக சொல்கிறார்.

எருசலேம்: உங்கள் குடும்பம் /உங்கள் நகரம்
யூதேயா, சமாரியா: உங்கள் மாநிலம்/ உங்கள் நாடு
உலகத்தின் முடிவுபரியந்தம்: மற்ற நாடுகள்

இயேசு உங்களுக்கான பெலனை கொடுத்து மேலே சொன்ன இடங்களுக்கெல்லாம் போ என்று சொல்கிறார்.

நீங்க நினைக்கலாம், என்னால இதெல்லாம் முடியாது அப்படினு. ஆனா இயேசு உங்களுக்கு தேவையான பெலனைக் கொடுத்து உங்களை அனுப்புகிறார். அதனால நீங்க தைரியமா போகலாம்.

சில நேரங்களில் வசனம் அப்போஸ்தலர் 1:8-ஐ நாம் தப்பா புரிந்து கொள்கிறோம்.
எப்படியென்றால் எருசலேம் அல்லது  யூதேயா அல்லது சமாரியா அல்லது உலகத்தின் முடிவு பரியந்தம் அப்படினு புரிந்து கொள்கிறோம்.
அல்லது முதலில் எருசலேம், அடுத்து யூதேயா,அடுத்து சமாரியா, அடுத்து உலகத்தின் முடிவு பரியந்தம் அப்படினு புரிந்து கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் இயேசு இதை ஒரு வரிசையிலோ அல்லது நான்கில் ஒன்றை தேர்ந்தெடுப்பதைப் போன்றோ சொல்லவில்லை.

சிலர் எருசலேமிற்கும், சிலர்  யூதேயாவிற்கும், சிலர்   சமரியாவிற்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் 

கடவுள் இந்த பகுதியிலெல்லாம் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.

இயேசு நம்மை செல்வதற்காக அழைத்திருந்தால், நாம் மூவ் பண்ணுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசு புதிய விதைகளை விதைப்பதற்கு, இன்று கடினமான நிலங்களை உழுது நல்ல நிலமாக மாற்றுகிறார்.

என்னைப்போல உங்களுக்கும்  இருக்கிற இடத்திலிருந்து மூவ் பண்றது மிகப்பெரிய சவால். சொகுசான வாழ்க்கையை விட்டு யாருக்குதான் போக விருப்பம் வரும்?

ஆனால் நான் என்னுடைய வாழ்க்கையில், சிறந்தவற்றை மிகச் சிறந்தவற்றிற்காகவும்,  நடுத்தரமானவற்றை அற்புதங்களுக்காவும், பழகியவற்றை ஆராய்ந்து முடியாத விஷயங்களுக்காகவும் தியாகம் செய்வதுதான் சிறந்தது எனக் கற்றுக்கொண்டேன். கடவுள் என்னை அதற்காகத்தான் அழைத்திருக்கிறார்.

நான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் இருக்கிற இடத்திலே செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது மூவ் பண்ண வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

ஒருவேளை நீங்கள் ஒரே இடத்தில் ரொம்ப நாட்களாக இருந்தால், நீங்கள் மூவ் பண்ண வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் இயேசுவை இதுவரை விசுவாசியாமல் இருந்தால், நீங்கள் எடுக்க வேண்டிய முதல் மூவ் இயேசுவை விசுவாசிக்க ஆரம்பிக்கலாம்.

இயேசு உங்களை மூவ் பண்ண சொல்கிறார்

நீங்கள் கேட்கலாம், எப்படி நான் மூவ் பண்ணாமல் ஒரே இடத்தில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வது? என்று

உங்களை நீங்களே கீழே உள்ள கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கான பதில் அதில்தான் இருக்கிறது.

என் வாழ்க்கையில் சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் எதாவது மாற்றம் இருக்கிறதா?
என்னுடைய செல்பி மற்றும் போட்டோ வில் சென்ற வருடம் இருந்த முகங்களை இன்னும் இருக்கிறதா?    
நான் எதாவது புது நபர்களுடன் பழக ஆரம்பித்திருக்கிறேனா? 

என் வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்று சில வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்களா? கடவுள் உங்கள் வேலையை விட்டுவிட்டு வேற வேலைக்கு மூவ் பண்ணச் சொல்கிறார்.

"நான் செட்டில் ஆக வேண்டும்" என்கிற மனநிலையை இன்று  உடைக்க வேண்டுமென்று நினைக்கிறன்.

ஏனென்றால் கடவுள் உங்களை செட்டில் ஆக வேண்டுமென்று அழைக்கவில்லை, மூவ் பண்ண வேண்டுமென்று அழைத்திருக்கிறார். ஆம், கடவுள் உங்கள் வாழ்க்கையை விரிவு படுத்த விரும்புகிறார்.

இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள், சிலர் செல்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள், மற்றவர்கள் இருக்கிற இடத்திலே இருப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்  என்பது ஒரு கட்டுக்கதை.

என்னுடைய பார்வையில், சிலர் செல்வதற்காகவும், மற்றவர்கள் இன்னும் அதிகமான இடத்திற்கு செல்லவும் அழைக்கப்பிட்டிருக்கிறார்கள்

கடவுள் இளையர்களை மற்றுமல்ல வயதான முதியவர்களையும் மூவ் பண்ண அழைக்கிறார் .

கிறிஸ்தவர்களாக நாம் அதிகமாக  கேட்கிற கேள்வி: நான் செய்ய வேண்டுமா? நான் போக வேண்டுமா? என்றுதான்.

ஆனால் நாம் கேட்க வேண்டிய கேள்வி: நான் போவேனா? என்பதுதான்.

இன்றைய செய்தி கடவுள் உங்களை மற்ற நாடுகளுக்குச் செல்ல அழைக்கிறார் என்பது அல்ல,   கடவுள் உங்களை அழைத்தால் செல்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்பதைப் பற்றித்தான்.

நாம் கேட்கிற அடுத்த கேள்வி: நான் போகலாமா? எனக்கு தகுதி இருக்கிறதா? 

உங்களுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் இருந்து கடவுளிடம் உங்களை சமர்ப்பித்தால் மற்றவைகள் அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், கடவுளே புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கோ, புதிய பள்ளிக்கு செல்வதற்கோ, நண்பருடன் பேசுவதற்கோ நான் தயாராயிருக்கிறேன் என்று அவரிடம் சரணடைவதுதான்.

ஆனால் நாம் பல நேரங்களில் கடவுளுடைய அழைப்பை உதாசினப்படுத்திவிட்டு கடின இருதயமுள்ளவர்களாயிருக்கிறோம் . வணங்கா கழுத்துள்ளவர்கள் என்று கூட சொல்லலாம்.

கடினம் : ஒரு பொருள் தன்மீது செலுத்தப்படுகிற விசையால் ஏற்படும் மாற்றத்தை தடுக்க கொடுக்கிற அதிகபட்ச எதிர்ப்பு. 

கடவுள் நம்முடைய வாழ்க்கையில் மூவ் பண்ண வேண்டுமென்று வரும்போது நாம் அதை தடுத்துவிடுகிறோம்.

சில நேரங்களில் அவர் நமக்கான வழியைக் காண்பிக்கும்போது அதை தவிர்த்துவிடுகிறோம்.

சுருக்கமாக சொன்னால், நம்முடைய கடின இருதயத்தால் கடவுள் நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிற முயற்சியை நாமே  கடினப்படுத்திவிடுகிறோம் .

அப்போஸ்தலர் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

இந்த வசனத்தை, ஸ்தேவான் தன்னை கல்லெறிந்து கொல்லுவதற்காக நிற்பவர்களைப் பார்த்து சொல்கிறார். நான் உங்களிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன், கடவுள் உங்களை நேசிக்கிறாரென்று. ஒவ்வொரு வாரமும் சர்ச்சில் வைத்து சொல்லி இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடவுளை உங்கள் இருதயத்தில்  அனுமதிக்காமல் தட்டிக் கழிக்கிறீர்கள்,என்கிறார்

ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி பேசுகிறார் என்று நம்புகிறேன்.

ஆமாம் கடவுள் எப்போதுமே நம்முடன் பேசுவதற்கு தயாராயிருக்கிறார். ஆனால் நாம் அவர் பேசுவதை அறிந்தும் அறியாத மாறி நிராகரித்துவிடுகிறோம். அப்படியே திரும்ப திரும்ப செய்து நம்முடைய இருதயத்தை மரத்துப்போக செய்துவிட்டோம்.

கடவுள் இன்று உங்களிடம் சொல்கிறார்: என்னை தடுப்பதை நிறுத்துங்கள். அப்படியொரு முடிவை இன்று எடுங்களென்று.

வணங்கா கழுத்துடையவர்களுக்கும் அழைப்பை ஏற்று செல்பவர்களுக்கும் உள்ள குணநலன்களை கீழே பட்டியலிடுகிறேன்

வணங்கா கழுத்துடையவர்கள்
அழைப்பை ஏற்று செல்பவர்கள்
தங்கள் செவியை கைகளால் மூடிக் கொள்வார்கள்
இதயத்தை திறப்பார்கள்
இருக்கமான கையுடையவர்கள்
தாராளமான கையுடையவர்கள்
தங்கள் மீது கவனம் செலுத்துவார்கள்
ராஜ்யத்தில் கவனம் செலுத்துவார்கள்
சுயநலமானார்கள்
சுயநலமில்லாதவர்கள்
ஆயத்தமில்லாதவர்கள்
எப்போதும் ஆயத்தமாயிருப்பார்கள்
பரிசுத்த ஆவியானவற்கு எதிர்த்து நிற்பார்கள்
பரிசுத்த ஆவியை சார்ந்திருப்பார்கள்
தாமதப்படுத்துவார்கள்
பதிலளிப்பார்கள்


நீங்கள் அழைப்பை ஏற்று செல்லும்போது, உங்களுடைய கனவுகள், திறமைகள் மற்றும் காரணங்கள் அனைத்தும் அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் .

ஆமாம், நீங்கள் அழைப்பை ஏற்று செல்லும்போது, சில ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கும், வசதியற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும், சிலவற்றை இழக்க வேண்டியிருக்கும்.ஆனால் இதன்மூலமாகத்தான் உங்களுடைய முழு ஆற்றலும் வெளிப்படும்   
நம்ம சர்ச் ல நாம் மிகப்பெரிய மூவ்மெண்ட் ல இருக்கிறோம். நாடு கடந்து "கேவ்" ல கலந்துகொள்ளவும், அகாடமி படிக்கவும் வராங்க. சர்ச் வருவதற்காகவே ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு மொத்தமா காலி பண்ணி வராங்க.

இதெல்லாம் ஒரு ஆரம்பம்தான். இன்னும் சிறப்பான,தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்க போறிங்க-னு கடவுள் சொல்றார்.

கடைசியாக பிலிப்பியர் 3: 12-14 வசனத்தை சொல்லி முடிக்க விரும்புகிறேன்.

12. நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?

இந்த செய்தியை உங்களிடம் சொல்வதில் நாம் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஏனென்றால் என்னுடைய வீடு இங்குதான் கடந்த 500 வருடங்களாக இருக்கிறது. இந்த தெருக்களின் வழியாகத்தான் நான் கல்லூரிக்கு தினமும் சென்று கொண்டிருந்தேன்.சிறுவயதில் இதே இடத்தில் இருந்த சினிமா தியேட்டரில் சினிமா பார்க்க வந்துள்ளேன்.ஆனாலும் கடவுள் என்னை எடுத்துப் பயன்படுத்தினார்.

ஒரு விவசாயியின் மகனால் கடவுள் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி.

என் மூலமாக கடவுள் இவ்வளவு பெரிய காரியங்களை செய்ய முடியுமென்றால்,உங்கள் வாழ்க்கையை கடவுளிடம் சமர்ப்பிக்கும்போது,  உங்கள் மூலமாகவும் பெரிய காரியங்களை செய்ய முடியும்.

கடவுளால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவரால் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்லமுடியாத இடமும் எதுவுமில்லை. நீங்கள் கேட்பதற்கும் அதிகமான, கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரியக் காரியங்களைச் செய்கிறவர் கடவுள்.

நீங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று உங்களுக்காக காத்திருப்பவர்கள் யார்?

உங்களுடைய அழைப்பு உங்களை மட்டும் சார்ந்ததல்ல,   உங்களுக்காக பலர் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment